22ம் திகதி மே 2018 அன்று, தூத்துக்குடியில் 16 போராட்டக்காரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட போது, தமிழ்நாட்டு தூத்துக்குடி சர்வதேச ஊடகங்களிலும் இடம் பிடித்துக்கொண்டது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்கள், பிரித்தானியாவில் தலைமைச் செயலகத்தை கொண்டுள்ள வேதாந்த கம்பனிக்கு சொந்தமான ஸ்டெர்லைட் செம்பு அகழும் தொழிற்சாலையை எதிர்த்து, 24 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வலயத்தில் இத்தொழிற்சாலை இயங்கி வருவதால் மிகவும் மோசமான பாதிப்புக்களை சுற்றுப்புறங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நீர், நிலம், காற்று மூன்றையும் மாசுபடுத்தி வரும் இத்தொழிற்சாலை, சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களையும் மோசமாக பாதித்துள்ளது. 2018இல், இத்தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டங்கள் வெளியானதை தொடர்ந்து இம்மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
இத்தொழிற்சாலையை, தமிழ்நாட்டு அரசு பல தடவைகள் மூடியுள்ள போதும், இந்தியாவின் நீதிமன்றத்தின் ஆதரவுடன் இது தொடர்ந்து இயங்கி வந்துள்ளது. இந்தியாவின் வேறு மூன்று மாநிலங்களில், சூழல் மற்றும் சமூக பாதிப்பு காரணங்களால், இத்தொழிற்சாலையை அமைக்கும் முயற்சிகள் முன்னர் தோல்வியடைந்தன. அப்படி இருந்தும், இத்தொழிற்சாலை தமிழ்நாட்டில் நிறுவப்பட்டமை, இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை அலட்சியம் செய்யும் போக்கையே காட்டுகிறது. இந்திய அரசின் மோசமான நோக்கை வெளிக்காட்டும் ஒரு சிறு சம்பவமே தூத்துக்குடி படுகொலை.
கூடாங்குளம் அணுமின்னிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டமும் இதே போன்ற அடக்குமுறையாலேயே இந்திய அரசு எதிர்கொண்டது. போராடும் கிராமங்களுக்கு அரசு, நீர், உணவு, மின்சாரம் மூன்றையும் தடைசெய்தது. 6800 மக்கள் மேல் தேசத்துரோக வழக்குகளும், ”அரசுக்கு எதிராக போர் தொடுத்த” வழக்குகளும் போடப்பட்டன.
இந்தியாவின் இயற்கை வளங்களை கார்பரேட்டுகள் சூறையாடுவதற்காக சாகர் மாலா என்ற இன்னுமொரு பேரழிவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கரையோர நீளமெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார வலயங்கள், மீனவர் சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மீனவர் சமூகம் 18 வீதம் மக்களை கொண்டுள்ளது.
மக்கள் செறிவாக வாழும் இடங்களில், உள்ளூர் மக்களின் சம்மதமில்லாமல், சூழலை பாதிக்கும் நீரினால் பாறைகளை வெடிக்க செய்யும் முறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடி அகழ்வதற்கு, இந்திய அரசு கார்பரேட்டுகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. ஒராண்டு காலமாக கதிரமங்கலம் கிராம மக்கள் இதையெதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் யாரும் இவர்கள் போராட்டத்தை கவனிப்பதாக இல்லை. பண்டைய தமிழர் வரலாற்று இடமாக உள்ள காவேரி ஆற்று படுக்கை இத்திட்டத்தால் அழிவுகளை சந்திக்கும். இப்பகுதி விவசாயிகளுக்கு காவேரி நீர் வழங்குவதையும் இந்திய அரசு தடுத்து வருகிறது. தமிழ்நாட்டுக்குரிய 378 TMC காவேரி நீர், 177 TMC ஆக நீதிமன்றத்தின் சம்மதத்துடன் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 45 கிராமங்கள், பெற்றோலியம், இராசயனப்பொருள், பெற்றோலிய-இராசயனப்பொருள் ஆகியவற்றிக்கு முதலீடு செய்யப்போகும் பகுதியாக (PCPIR) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 57,345 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்படும். அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டால், அறிவித்த கிராமங்களைவிட பெரியயளவு பகுதி பாதிக்கப்படும். 5 மில்லியன் மக்கள் இக்கிராமங்களில் வாழ்கிறார்கள். இத்திட்டம் இக்கிராமங்களை வாழமுடியாத இடங்களாக மாற்றும். அதனால் பெரும்தொகையான மக்கள் இடம்பெயருவார்கள். கெயில் (Gail – இந்தியா) கம்பனிக்கு அரசு 310 கிலோ மீற்றர் நீளமான குழாய்கள் தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்கள் ஊடாக போடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இது 128 விவசாய கிராமங்கள் ஊடாக செல்லும். தமிழ்நாட்டின் அரசும் இத்திட்டத்தை எதிர்த்து, பதிலாக குழாய்களை நெடுஞ்சாலைகள் வழியாக போடுவதற்கு முன்மொழிந்தது. ஆனாலும் இந்தியாவின் உச்ச நீதிமன்றம், குழாய்களை விவசாய நிலங்கள் ஊடாக போடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. நிலச்சொந்தக்காரர்கள் மேல் GAIL கம்பனி கடுமையான விதிகளை போட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிலத்தின் பெறுமதியில் 10 வீதமே இழப்பீடாக கொடுக்கப்பட்டது.
பிரித்தானியாவை தளமாக கொண்ட அயோக்கிய பல்தேசிய கம்பனியும் இந்திய அரசும் கூட்டாக இணைந்து இத்திட்டங்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதேனும் கரிசனையின்றி இயங்குகின்றன. ”என்ன விலை கொடுத்தாலும் தொழில் வளர்ச்சியே” என்ற நோக்கில் தமிழ்நாட்டிலுள்ள 80 மில்லியன் மக்களின் நலன் ஒரு பொருட்டல்ல. தமிழ்நாட்டில், BJP அரசுக்கு ஆதரவு இல்லை என்பதும் இந்நோக்கிற்கு பலம் சேர்க்கிறது. BJP அரசின் இப்போக்கும், பிரித்தானியா கடும்போக்காளர்களின் Brexit கொள்கையும் இங்கு கைகோர்த்து நிற்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சூழல் பாதுகாப்பு மற்றும் நீதிநெறியான கொள்கைகளைிலிருந்து விடுபட்டு, பழைய ”கிழக்கிந்திய கம்பனி” போன்ற ஒரு பேராசை பிடித்த வழியை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக Brexit கடும்போக்காளர்கள் இதை பார்க்கிறார்கள். வேதாந்த கம்பனியும், அதைப்போன்றவையும் பல்தேசியகம்பனிகள். உதரணமாக இவை ஜெர்மனியில் பல பங்கு சந்தைகளில் பதியப்பட்டுள்ளன.
இதுவொரு சர்வதேச பிரச்சனை. அதனாலேயே நாங்கள் ஒரு சர்வதேச அமைப்பை, எமக்கொல்லாம் பொதுவான சில விழுமியங்களின் அடிப்டையில், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுடன் கூட்டொருமை வளர்ப்பதற்காக உருவக்கிகிறோம். இதுபோன்ற கரிசனைகள் உள்ள அமைப்புக்களையும் தனிப்பட்டவர்களையும் இப்பிரச்சாரத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
23 யூன் 2019, ஜெர்மனி justice4thoothukudi@gmail.com

Comments are closed.